அன்று தான் கண் விளிக்கிறார் ராமசாமி ! அவர் எதோ ஒரு வீட்டில், ஒரு நல்ல மெத்தையில் படுத்து இருந்தார். கையில் எதோ பிய்த்துகொண்டு வந்தது . சுவரில் சுரேஷ் அவன் மனைவியுடனும் அவன் மகளுடனும் சிரித்து கொண்டு இருந்தான். அவனுக்கு வயதாகி இருந்தது. தலையில் மயிரை காணவில்லை. ஏன் என யோசிக்கும் போதே யாரோ அவர் அருகில் இருப்பது போல இருந்தது. சற்று திரும்பி யாரோ அவர் எதிரில் நிற்பதை கண்டார். நிற்பவர் அவரை போலவே இருப்பதாக அவருக்கு தோன்றியது. அவர் நடக்க ஆரம்பித்ததும் எதிராளியும் நடக்க ஆரம்பித்தான். அது கண்ணாடி என்று தெரிந்ததும் ராமசாமிக்கு தலை சுற்றி வியர்க்க ஆரம்பித்தது. தன் முகத்தை தொட்டு பார்த்து கொண்டார், தடவினார் சுருக்கங்கள் உரைத்தது. பாரத்துடன் தனக்கு என்ன ஆனது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு வெளியே வந்தார். காலெண்டரில் 2012 என்ற தேதியை கண்டு திடுக்கிட்டார். அப்போது சுரேஷ் நடந்து வந்து கொண்டு இருந்தான். கவனம் முழுவதும் நியூஸ் பேப்பரில் மட்டுமே இருந்தது. உணர்ச்சி தட்டவே நிமிர்ந்து பார்த்தான். அப்பாவை கண்டதும் அவனுக்கு சந்தோசம் என்பது அவன் முகத்தில் தெரிந்தது. ஆனால் சமையற்கட்டில் இருந்து வந்த அவன் மனைவியின் முகத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லை. போட்டோவில் பார்த்த சுரேஷின் மகள் பேய் ஆரைந்தார் போல் ராமசாமியை பார்த்தாள்.
அப்போது தான் மரகதம் கோவிலுக்கு சென்று ஒரு கூடையுடன் வீட்டினுள் நுழைந்தாள். மரகதம் எதிர்பாத்தது தான் என்றாலும் அவளாலும் அடக்க முடியாமல் அழுதாள். சுரேஷ் ராமசாமியை அதே அறைக்கு அழைத்து சென்று அமர வைத்தான். அனைவரும் உள்ளே வந்தனர், மருமகளை தவிர. சுரேஷ் "அப்பா எப்படி இருக்கு ?",என்றான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கும் பொது மரகதம் நெற்றியில் விபூதியிட்டாள். "எனக்கு என்னடா ஆச்சு ?",என்றார். அவர் குரலை கேட்க அவருக்கே நன்றாக இருந்தது. மருமகளும் வந்து அறையின் வாசலில் நின்றுகொண்டாள்.
"நீங்க கோமாவில் இருந்திங்க அப்பா... 20 வருஷமா...."
ராமசாமிக்கு நினைவில் உரைத்தது தான் கடைசியாக சைக்கிளில் சென்று கொண்டு இருந்த பொது ஒரு லாரி தாறுமாராக வந்து சைக்கிளை பின்னல் இடித்து... அவ்வளவு ஞாபகப் படுத்தியதர்க்கே அவர்க்கு தலை வலித்தது. பயங்கரமாக பசித்தது. வயிற்றை தடவி பார்த்தார். மரகதம் "சாப்டுறின்களா ?" என்றாள். அவரை அழைத்துக்கொண்டு எல்லாரும் டைனிங் டேபிளுக்கு வந்தனர். எல்லாரும் அவரையே பார்த்தது அவருக்கு மேலும் கூச்சத்தை கொடுத்தது... அவர் மரகதத்தை மட்டும் பார்த்தார்... அவர் கோமாவிற்கு சென்ற பொது சுரேஷுக்கு வயது 17 அவனை படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து அனைத்தையும் தனியாகவே செய்து இருக்கிறாள். வயதானாலும் அழகாகவே இருந்தாள். தன்னை போல ஒரேடியாக மாறிவிடவில்லை.ராமசாமிக்கு அழுகை வந்தது. தான் அப்போதே இறந்து இருக்கலாம் என்றும் தன்னை இத்தனை நாட்களாய் எப்படி தாங்கி கொண்டு இருந்தார்கள் என்பதும் அவருக்கு வேதனை அளித்தது.
சுரேஷின் மகள் கையில் எதோ வைத்து நோண்டிக்கொண்டிருக்க மருமகள்" என்நேரமும் மொபைல்லயே தான் கண்ணா இருக்க அப்படி யார் தான் பேசுறியோ" என திட்டிக்கொண்டே அதை புடுங்கி அவர் அருகில் வைத்தாள். எதோ லைட் அடித்தது vodafone என மேலே மின்னியது. டிவி பெரியதாக இருந்தது. அவர் எதுவும் கேட்கவில்லை. மருமகள் இன்னொருத்தருக்கும் சேந்து நான் தான் சமைக்கனுமா என்று சண்டை போட்டது காதில் விழுந்தது.... சுரேஷ் வந்தான் "டாக்டர்ட்ட பேசிட்டேன் அப்பா இன்னைக்கு மதியம் செக் பண்ண வருவார்" என்றான். சாப்பிட்டு உள்ளே சென்று படுத்தார். அறையில் குளிர் அதிகமாக இருந்தது. என் என மரகத்திடம் கேட்ட போது சிரித்துக்கொண்டே "அது 'ஏசி'ங்க ரூம சில்லுனு வச்சிருக்கும்" என்றாள். அவருக்கு சுருக்கென்றது. ஆச்சரியம் வரவில்லை.
நியூஸ் பேப்பர் எடுத்து பார்த்தார் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருந்தது. தமிழகத்தில் இன்னும் கலைஞர் தான் முதலமைச்சராய் இருந்தார். பிஜேபியை பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஈழம் என்று ஒரு வார்த்தை புதிதாக இருந்தது. சச்சின் இன்னும் ஆடிக்கொண்டிருந்தார்... சச்சின் கடந்த 20 வருடமாக ஆடிக்கொண்டு இருந்ததையும் அவர் செய்த சாதனைகளையும் பற்றி ஒரு முழு பக்கமும் எழுதி இருந்தனர்.
வெளியே தண்ணீர் குடிக்க வந்த போது மரகதமும் மருமகளும் கையில் எதையோ வைத்து அழுத்தவும் டிவி சேனல் மாறியது. அந்த காலத்தில் ஒரே டிடி மட்டும் தான் இருந்தது இப்போது ஏகப்பட்ட சேனல் இருந்தது தெரிய வந்தது.
மாலையில் பேத்தி வந்ததும் அவள் அறைக்கு எதோ ஒரு பயந்துடன் சென்றார்... அவள் காதில் இருந்த இரு வையர்களை கழட்டி வைத்து விட்டு "வா தாத்தா... உக்காரு..." என்றாள். அமர்ந்து அவள் அறையை சுற்றி பார்த்தார் கண்ணாடியின் முன்னர் நிறைய டப்பாக்கள் இருந்தது.
"எப்படி இருக்க தாத்தா ?"
"நல்ல இருக்கேன் மா..."
"உன் பேரு என்ன டா....?" அவர் குரலில் சோகம் தட்டியது....
"சாரு தாத்தா..."
"வெறும் சாரு தானா ?"
"எஸ்"
"என்ன படிக்குற ?"
"கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் தாத்தா..."
மேற்கொண்டு பேச எதுவும் இல்லாமல்(தெரியாமல் !) அவள் மொபைல் டேபிளில் இருந்தது "இது...?" என தயங்கிய படியே கேட்டார். சாரு இமைகளை விரித்து "இது மொபைல் போன் தாத்தா இது முலமா யார்ட வேணா பேசலாம்... மெசேஜ் அனுப்பலாம்.... மெயில் அனுப்பலாம்...."
"மெயிலா ?" அவர் மெயில் என்றால் ரயில் என்று தான் ஞாபகம்...மனதிலேயே அந்த கேள்வியை வைத்துக்கொண்டார்.
உடனே சாரு அந்த டப்பாவில் இருந்த எண்களை தட்டினாள் காதில் வைத்து " அப்பா..., தாத்தா எதோ பேசனுமாம்" அவர் அதை காதில் வைக்க சிரம பட்டார் "அப்பா டாக்டர் எல்லாம் ஓகேனு சொல்லிடாரு.... நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆவும் ரெஸ்ட் எடுங்க" என்றான் "சரிடா" பீப் பீப் என கேட்டது. அவரால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியப்பட்டார். சாரு அவரை பார்த்து விழிகளை பெரிதாக்கி புன்னகைத்தாள்... கண்களாலேயே எப்படி ? என்றாள் ராமசாமி அன்றைக்கு முதன் முறையாக சிரித்தார்.
பேத்தியிடம் "மெயில்னா ரயில் தான மா ?" உடனே பேத்தி தலையில் அடித்துக்கொண்டு "ஐயோ சாரி தாத்தா.." என்று சொல்லி சிரித்தாள். ராமசாமிக்கு பேத்தியின் செயல்களில் ஒரு சந்தோசம் இருந்தது. "நம் பேத்தி இத்தனை அறிவாளி ?" என்ற பெருமிதமும் அவளின் குழந்தைத்தனமும் ஒட்டி இருந்தது அவருக்கு அவள் இன்னும் வளரவே இல்லை போல் தோன்றிட்டு.அவளிடம் கேடு தெரிந்து கொள்வதில் கூச்சம் எதுவும் தோன்றவில்லை.
அவள் பையுனுள் இருந்து ஒரு பெரிய நல்ல கவர் போட்ட புத்தகம் போல் ஒன்றை எடுத்தாள்... அந்த புத்தகத்தை விரித்தாள் மடியில் வைத்தாள். ராமசாமி வாயை பிளந்தார் அது ஒரு குட்டி டிவி. அதை பார்த்தவளாய் "தாத்தா இத டிவி யா னு மட்டும் கேட்ட கொட்டு தான்" உடனே அவர் "சீச்சி இத பொய் யாராச்சி டிவி னு சொல்வாங்களா ? அதான் நல்ல தெரிதே..." என்றார். உடனே சாரு "அப்ப இது என்னனு சொல்லு பாப்போம்" என்றாள். "இது.... அது.... மாறி.... வந்து டைப் ரைட்டர் தான ?" என்றார். சாரு முறைத்தாள். இருவரும் சிரித்தனர்.
அடுத்த நாள் சனி ஞாயிறு என்பதால் சாருவும் தாத்தாவும் வீடு முழுக்க சுற்றினர். ராமசாமிக்கு தான் மீண்டும் குழந்தையாய் பிறந்ததை போல் இருந்தது. நேத்து பேத்தி மெயில் அனுப்ப சொல்லி தன் நண்பனை பேஸ் பூக்கில் கண்டு பிடித்து அவனுக்கு மெயிலும் அனுப்பி விட்டார்.எல்லாமே புதிதாய் இருந்தது.
அவர் சில விஷயங்கள் உலகம் மாறிவிட்டதென தெரிய வைத்தன "அனைவரும் மொபைல் போன் வைத்து இருந்தனர் (வீட்டில் நால்வரும், சுரேஷ் தனக்கு வேறு வாங்கி தருவதாய் சொலி உள்ளான் சோ 5), எல்லாரும் தன் மகன்.. உட்பட கம்பூ்யுடர்ரை எதோ வகையில் சார்ந்தே உள்ளனர்(சாரு சொல்லித்தந்தது), நடிகைகள் ஆடைகள் குறைந்து விட்டது, நடிகர்கள் மேக் அப் ஏறி.. விக் வைத்து நடித்தனர். ஊழல் இப்போதும் நடந்து கொண்டு இருந்தது ஆனால் அந்த காலத்தை விட அதிகாமாக , ராஜீவ் கொலை காரணமாக தான் ஈழம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது, தமிழக மீனவர்கள் மாசம் ஒரு முறை சுட்டு கொல்ல படுகின்றனர், கிருஷ்ணா நதி நீர் திட்டம் பெரியார் ஆணை எதிலிருந்தும் தண்ணீர் வரவில்லை தமிழகத்திற்கு. நிறைய கேஸ்கள் பெண்டிங்கில் உள்ளன உச்ச நீதி மன்றத்தில், இந்திய 1983க்கு பிறகு டோனி தலைமையில் இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளது, சச்சின் ஓய்வு பெரும் முடிவில் இல்லை, கூகிள் என்று ஒரு உரலி தேடல் உள்ளது அதை தான் எல்லோரும் நம்பி உள்ளனர், நண்பர்களுடன் பேச பேஸ் புக்.. ட்விட்டர் போன்றவை வந்து விட்டன... தெரு முனையில் நின்று யாரும் பேசுவதில்லை,பைசாக்களில் 25 ,50 மட்டுமே செல்லும், டீ காபியின் விலை 1 ரூபாயில் இருந்து 10 முதல் 90 வரை ஏறி இருந்தது, நல்ல படங்கள் லாபம் தருவதில்லை, போஸ்ட் ஆபீஸ் யாரும் உபயோகிப்பது இல்லை... கோரியர் தான்(ஒரு இரவில் சென்று விடுமாம்), எல்லா பசங்களும் இன்ஜினியரிங் தான் படிக்கிறார்கள், பல புதிய எழுத்தாளர்கள் இருந்தனர், கள்ள காதல் அதிகரித்து இருந்தது, ஏகப்பட்ட விலை நிலங்கள் விற்க பட்டு குடியிருப்புகளாக மாறி,அரசியல்வாதிகளை அந்த காலம் போல யாரும் மதிப்பது இல்லை, அமெரிக்கா தான் ஜமிந்தாரக இருந்தாலும் அதுவே சோற்றுக்கு சிங்கி அடிக்கிறது,எண்ணெய்க்காக ஈராக்கை அழித்து விட்டது, பெட்ரோலில் தான் அனைத்தும் ஓடுகிறது, பணக்காரர்கள் வைத்தது தான் சட்டமாக இருந்தது..."
சில விஷயங்கள் மாறவில்லை சில, "பொதிகையில் ஒலியும் ஒளியும், பணம் பத்தும் செய்வது" அவ்வளவே....
இதையெல்லாம் படித்ததும் தன் வாழும் சமுகம் இவ்வளவு மோசமான மாற்றங்களை கொண்டு இருப்பதை எண்ணி வெட்கினார்.இருந்தும் தான் இரண்டாம் இன்னிங்க்சை அனுபவிப்பதாகவே எண்ணினார்... மேலும் சாருவுடன் பேசுவதில் நிறையா விஷயங்கள் தெரிந்து கொண்டார். மகனிடமோ மனைவியிடமோ அவரால் அவ்வளவாக எளிதாக பழக முடியவில்லை.
ராமசாமிக்கு இப்போது வெளி உலகை பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் வந்தது. யாரிடமும் சொல்லிக்கொண்டு போக இயலாது சாருவிடம் சொன்னால் கூடி போவாள் ஆனால் அவளை கூட்டி போவதை விட தானே போய் பாக்க வேண்டும் என நினைத்தார். அவர் சைக்கிள் இன்னும் வீட்டில் தான் இருந்தது.. காத்து இல்லை பிரேக் இருந்தது. சென்னையில் சைக்கிள் காத்து அடிக்கும் கடை எங்கும் இல்லை அதும் இருந்தாலும் அந்த இரவில் திறந்து வைத்து இருக்க மாட்டார்கள். கடைசியில் பெட்ரோல் பங்கில் அவரை உள்ளே கூப்பிட்டு காத்து அடைத்து கொடுத்தார்கள். பின்னர் வண்டியில் செல்ல ஆரம்பித்தார். ஊரில் சில மாற்றங்கள் இருந்தாலும் எல்லா இடங்களும் ஓரளவுக்கு ஞாபகம் இருந்தது...
ராமசாமிக்கு தான் இத்தனை காலம் கோமாவில் இருந்தது நல்லது என்று பட்டது "எல்லாம் நன்மைக்கே..."னு சும்மாவா சொல்லி இருக்கானுக என்று நினைத்து கொண்டார்.. அவர் சைக்கிளில் செல்வதை பறப்பதை போல உணர்ந்தார்.தான் ஒரு வயதான குழந்தை, குழந்தை பருவம் தனக்கு மட்டுமே இரு முறை வாய்த்ததை எண்ணி கர்வம் கொண்டார். இரவின் நிசப்தத்தில் தன்னை இழந்தார். எப்படியாவது மருமகளுக்கு உதவ வேண்டும் அவள் வேலையை குறைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
சிக்னல் தூரத்தில் இருந்தது... ராமசாமிக்கு குழப்பம் ஒரு வேலை சிக்னலின் கலர்களை மாற்றி இருந்தால் ? ஆனால் அங்கு சிவப்பு மட்டும் எரிந்து கொண்டு இருந்தது அது அணைந்து பச்சை வரவும் ராமசாமி சைக்கிளை அழுத்தினார்... ஆனால் இடப்பக்கமிருந்து வந்த லாரி இம்முறை அவருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை....
No comments:
Post a Comment